Wednesday, January 11, 2012

மீண்டும் அமெரிக்காவிடம் கையேந்தும் இந்தியா!



மீண்டும் அமெரிக்காவிடம் கையேந்தும் இந்தியா!...
ஈரான் மீதான அமெரிக்காவின் தடை இந்தியாவை பெருமளவில் பாதிக்கப்போகிறது. சவூதி அரேபியாவிற்கு அடுத்து இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெயை அளிப்பது ஈரான் ஆகும். நம் நாட்டிற்கு தேவையான சுத்திகரிக்கப்படாத 80 சதவீத கச்சா எண்ணெயும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 12 சதவீதம் ஈரானிடமிருந்து வாங்குகிறோம்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்ட மசோதாவில் ஈரான் மத்திய வங்கியுடன் நிதியியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்நாட்டு, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பே ஈரானின் ஷிப்பிங் லைசன்சுடன் தொடர்புடைய 10 கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்த 10 நிறுவனங்களில் ஒன்று இந்தியா-ஈரான் கூட்டு நிறுவனமான ஈரானோ ஹிந்த் ஆகும். புதிய தடை விதிப்பின் மூலம் இந்தியா கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா, சீனா நாடுகளைப் போல இந்தியாவிடம் ஈரானுக்கு எதிரான தடையில் அணிசேர அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்பது அமெரிக்காவின் கோரிக்கை. அதேவேளையில், தடையில் சில தளர்வுகளை ஏற்படுத்தக்கோரி இந்தியா அமெரிக்காவை அணுகியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இந்தியா அல்ல. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் தனிப்பட்ட விருப்பங்களே ஆகும். ஆனால், ஈரானிடம் இருந்து அதிகமாக எண்ணெயை எதிர்பார்க்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கோரிக்கையை கடைப்பிடிக்க நடைமுறையில் ஏராளமான சிரமங்கள் உள்ளன. ஆனால், ஒரு உண்மையை எடுத்துக்கூறாமல் இருக்க இயலாது. நடைமுறையில் சிரமங்கள் ஏதும் இல்லையெனில் அமெரிக்காவின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் இந்திய அரசு முன்னணியில் நின்று இருக்கும். ஏனெனில் அவ்வளவு தூரம் அமெரிக்காவிற்கு அடிமை விசுவாசத்தை காட்டி வருகின்றார்கள் நமது ஆட்சியாளர்கள். குறிப்பாக பொருளாதார, வெளிநாட்டு கொள்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக அதனை நாம் கண்டு வருகிறோம்.
இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திற்காக ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இந்தியா எடுத்துள்ளது. எரி சக்தி துறையில் கூட அமெரிக்காவை சார்ந்திருக்கும் சூழலுக்கு அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை கொண்டு செல்கிறது. இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு அமெரிக்காவின் விருப்பத்தை விட நமது விருப்பங்களுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்ய நமது ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. அதற்கும் மேலாக இந்தியாவின் துவக்க கால கொள்கையான அணிசேராக் கொள்கையை கைவிட்டது இந்தியாவின் மீதான நேர்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மீது தடைகளை விதிக்க பொய் காரணங்களை கூறி அமெரிக்கா ஐ.நாவில் முயற்சிகளை மேற்கொண்ட வேளையில் இந்தியாவின் நிலைப்பாடு பலகீனமானதாக இருந்தது. சுருக்கமாக கூறினால், இந்தியாவின் வெளிநாட்டு க்கொள்கையில் அமெரிக்க சார்பு கலந்ததன் காரணமாக ஈரான் தடை விவகாரத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சும் நிர்கதியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் எரிவாயு குழாய் திட்டம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், அங்கேயும் அமெரிக்காவின் நிர்பந்தங்களின் காரணமாக அதிக தூரம் முன்னேற முடியவில்லை.
அமெரிக்காவிடம் பயம்; அதேவேளையில் ஈரானின் எண்ணெயும் வேண்டும். இத்தகையதொரு நெருக்கடி இந்தியாவை வாட்ட துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. கடந்த பல வருடங்களாக ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஏசியன் க்ளியரிங் யூனியன் என்ற அமைப்பின் மூலமாகவே இந்தியா நடத்தி வந்தது. அமெரிக்காவிற்கு அஞ்சி இந்திய ரிசர்வ் வங்கி அந்த அமைப்பை கைகழுவியது. இந்நடவடிக்கை ஈரானுடனான வர்த்தகத்தை பெருமளவில் பாதித்தது. வாங்கும் எண்ணெய்க்கான பணத்தை அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழலில் எண்ணெய் வர்த்தகம் ஸ்தம்பிக்க துவங்கியது. பின்னர் ஒரு ஜெர்மன் வங்கி நியமிக்கப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாக அந்த ஜெர்மன் வங்கியும் பின்வாங்கியது. தற்பொழுது ஒரு துருக்கி வங்கி மூலமாக ஈரானுக்கு பணத்தை இந்தியா அனுப்பி வருகிறது. இங்கேயும் அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் நெருக்கடி துவங்கி விட்டது. தினமும் மூன்றே முக்கால் லட்சத்திற்கும் மேற்பட்ட பீப்பாய் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை ஈரானில் இருந்து பெற்றுவரும் இந்தியாவிற்கு அமெரிக்காவிடம் சில சலுகைகளுக்காக கெஞ்சவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்காலம் ஏதேனும் சலுகைகளை வழங்கினால் கூட அதற்கு பதிலாக வேறு வகையில் ஈடு செய்யப் போவது உறுதி.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திய அரசின் அமெரிக்க சார்பால் நாட்டிற்கு கிடைக்கும் பலன் பூஜ்ஜியமாகும். ஆனால், அமெரிக்காவோ அரசியல், பொருளாதார, வர்த்தக துறைகளில் இந்தியாவிடமிருந்து ஆதாயம் அடைந்துவருகிறது.
அமெரிக்காவின் நோக்கங்களையும், ரகசிய திட்டங்களையும் இந்திய அரசு அவ்வப்போது அடையாளம் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்ததுதான் தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த நூற்றாண்டில் நடத்திய போர்கள் அனைத்தும் அவர்களின் சொந்த விருப்பங்களுக்கு ஆகும். கடைசியாக போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈராக் என்றதொரு தேசத்தை சீரழித்தார்கள். அதே தந்திரத்தை தான் ஈரான் மீது தற்பொழுது சாட்டுகிறார்கள். பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுஸைன் சேகரித்து வைத்துள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை முன்பு ஈராக்கின் மீது சாட்டிய அமெரிக்காதான் தற்பொழுது ஈரானின் மீது அணுகுண்டு தயாரிப்பதாக குற்றம் சாட்டுகிறது.ஆனால் அமெரிக்காவோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரித்து பாதுகாத்து வருகிறது.
ஜப்பானில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை அணுகுண்டுகளை வீசி கொடூரமாக கொலைச்செய்து எதிர்கால சந்ததியினரையும் துயரத்தில் ஆழ்த்திய அமெரிக்கா என்ற சர்வதிகார தேசம் ஒருபோதும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்(என்.பி.டி) கையெழுத்திட்டதில்லை. ஆனால் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.ஆகையால் அவர்களுக்கு உள்நாட்டு தேவைகளுக்காக அணுசக்தியை தயாரிக்கும் உரிமை உள்ளது.
என்.பி.டியில் கையெழுத்திடாத இஸ்ரேல் அணுகுண்டு தயாரித்தது குறித்து பிரச்சனையை கிளப்பாத அமெரிக்கா எரி சக்திக்கு கூட அணுசக்தியை ஈரான் உபயோகிக்கக் கூடாது என்ற பிடிவாதத்தில் உள்ளது.அமெரிக்காவிற்காக நேர்மையை இழந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனக்கு சேவகம் புரியும் அடிமை நாடுகளாகவே அந்நாடு கருதுகிறது.இதன் காரணமாக அமெரிக்காவின் பொய்ப் பிரச்சாரங்களை அடையாளம் காட்டவோ எதிர்க்கவோ இந்த நாடுகளால் இயலாமல் போனது. தற்போதைய நெருக்கடியை இந்தியா சமாளித்தாக வேண்டும். அதற்கு தேவை உண்மையை அங்கீகரிக்கும் துணிச்சலாகும்.
தற்பொழுது அமெரிக்காவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளும், ஈரானுடன் விவாதிப்பதும் பலனை தரலாம். அமெரிக்கா சில தற்காலிக சலுகைகளை அளிக்கலாம்.ஈரானோ, தங்களுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய்க்கான பணம் டாலரிலும், யூரோவிலும் கிடைக்காது என்பதால் ரூபாய்  அல்லது ரூபிள் மூலமாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் இவையெல்லாம் தற்காலிக் ஆறுதலாகும்.
நீண்டகால அடிப்படையில் இந்தியா தமது கொள்கைகளை மறுபரிசீலனை செய்தே தீரவேண்டும்.இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிப்பது வாஷிங்டனில் யுத்த பிரபுக்களும், கார்ப்பரேட் முதலாளிகளும், வெள்ளை மாளிகை குமஸ்தாக்களும் அல்லர் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சல் இந்திய ஆட்சியாளர்களுக்கு உருவாகவேண்டும். அதன் அடிப்படையில்தான் உறுதியான கொள்கைகளை இந்தியாவால் வகுக்க முடியும்.

Thursday, January 5, 2012

இஸ்லாம் ஓர் அதிசயம்


ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.
    இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.
    எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும். ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள். முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.
    இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன. ஆக அனைத்து  மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.
    எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன. உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள். உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?
    பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன. ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?
    ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?
    இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே… இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை. மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.
    முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது. ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.
    முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும். தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.
    தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும். இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?
    இறைவன் தன்னுடைய திருமறையில் இப்படி கூறுகின்றான்;
    يُرِيدُونَ لِيُطْفِؤُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ
    “அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
    உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான். மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.
    Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை. மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.
    இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது. போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது. விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.

Zakir Naik vs William Campbell-Quran and Bible தமிழில்


 

 



Sunday, January 1, 2012

இடஒதுக்கீடு: ஏன் இந்த கொல வெறி?

இடஒதுக்கீடு ஏன் இந்த கொல வெறி
சிறுபான்மை சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இத்தீர்மானத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியும், சங்க்பரிவார அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாதாம் தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்நாட்டு போருக்கும் பா.ஜ.க தயாராகுமாம்!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இம்முறை உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட பேரவை தேர்தல்களில் நோட்டமிட்டு இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பாராட்டத்தக்கதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என பா.ஜ.க தலைவர்கள் தங்களது எதிர்ப்பை நியாயப்படுத்த சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்துடனும், சிறுபான்மையின மக்களுடனும் பா.ஜ.கவிற்கும், சங்க்பரிவாரத்திற்கும் அணு அளவேனும் மதிப்பிருந்தால் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளியிருப்பார்களா? அரசியல் சட்டத்தையும், நீதிபீடத்தையும் சிறிதளவேனும் மதித்திருந்தால் சிறுபான்மை வகுப்பினரான முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நரேந்திர மோடியை தலையில் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களா? சுருக்கமாக கூறினால், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்க்பரிவார அமைப்புகளின் எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது வகுப்புவாதமும், முஸ்லிம்கள் மீதான தீராத பகையுமாகும். இவற்றை விட வேறு எந்த அஜண்டாவும் அவர்களுக்கு இல்லை.
இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கிடைத்தே தீரவேண்டும் என்றால் அவர்கள் இந்துமதத்தின் தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் அபயம் தேடிக்கொள்ளலாம் என்ற தொகாடியாவின் வகுப்பு வெறியை உமிழும் விஷம் தோய்ந்த வார்த்தைகளில் இருந்து சங்க்பரிவாரத்தின் இடஒதுக்கீட்டின் மீதான வெறுப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சிறுபான்மையின வகுப்பினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் ஆகியோரும் அடங்குவர். ஆனாலும், ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு’ என்ற கார்ப்பரேட் ப்ரேக்கிங் நியூஸ்கள் வந்த உடனேயே தளர்ந்துகிடந்த பா.ஜ.க தலைவர்கள் துள்ளி எழுந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு தொலைக்காட்சியில் வாதம் புரிய கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுக்க அணிவகுத்தனர். மதசார்பின்மையும், தேசப்பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் வெதும்பினர்.
பல தசாப்தங்களாக இந்தியாவில் பாரபட்சம் மற்றும் சமூக சூழல்களின் பலி ஆடுகளான முஸ்லிம்களுக்கு இந்த குறைந்தளவு இட ஒதுக்கீடாவது ஆறுதல் அளிக்கட்டும் என்ற கருத்து எந்த சேனல்களின் விவாதத்திலும் இடம்பெறவில்லை. மாறாக லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்புக் குழுவில் கூட அச்சமூகத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்ற கூக்குரல்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் கேட்டது.
தினமணி என்ற பார்ப்பன நாளேடு பழத்தில் ஊசியை அல்ல விஷ ஊசியை ஏற்றும் கைங்கர்யத்தை தலையங்கம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. மேலோட்டமாக படித்தால் நன்றாகத்தான் இருக்கும் அதன் பின்னணியில் இருக்கும் மேல்ஜாதி திமிரும், காழ்ப்புணர்வும் அதனை சற்று ஆழ்ந்து கவனித்தால் புரியவரும்.
பா.ஜ.கவின் அதே இனவெறியைத்தான் சேனல்களில் நடந்த விவாதங்களிலும் காணமுடிந்தது. ‘அரசியல் சட்ட விரோதம்’ என்ற போர்டை மாட்டி வைத்துவிட்டு ஆக்ரோஷமடைந்தார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரும் வேளையில் அரசியல் சட்டவிரோதம் என்ற குரல் எழும்பவில்லை. அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் 50 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனாலும், உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்களும் மகளிருக்கு மனதார வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கடைசி வார்த்தை அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அறியாமல் இந்த மற்போர் நடக்கவில்லை. அரசு தீர்மானம் வந்தால் அதன் தடைகள் ஒவ்வொன்றாக அகலும். முஸ்லிம்கள் அத்தகைய சலுகைகளுக்கு எல்லாம் தகுதியானவர்கள் அல்லர் என்பது தான் உண்மையான பின்னணி.
1956-ஆம் ஆண்டு சீக்கிய மதப் பிரிவினரையும், 1990-ஆம் ஆண்டு புத்த மதத்தை சார்ந்தவர்களையும் எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் சேர்த்த வேளையில் யாரும் அதனை எதிர்க்கவில்லை. இடஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடங்கிய சிறுபான்மையினர் அனுபவித்து விடக்கூடாது என்ற மேல்ஜாதி ஆதிக்க மனப்பாண்மைதான் தேசிய நீரோட்டத்தில் காணப்படுகிறது.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு கூட  இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என மேல்ஜாதி வர்க்கம் பாடுபடுகிறது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு அவர்களின் தனித்தன்மையை இழக்காத வகையிலான நலத் திட்டங்களுக்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை என அரசியல் சட்டம் கூறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடும், உறுதியான நடவடிக்கைகளும் தொடர வேண்டியது வரலாற்று ரீதியான ஒரு அத்தியாவசியமும் ஆகும். ஆனால், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு பிறகும் மத சிறுபான்மையினரின் நிலை என்ன? கல்வி, அரசு பணி, தனியார் துறை, மீடியா – என அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? வருமானம், சுகாதாரம், தொழில் துறை ஆகியவற்றில் நாடு அடைந்த முன்னேற்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் அடைந்த பலன் என்ன? இக்கேள்விகளுக்கு எல்லாம் எதிர்மறையான பதில்களே கிடைக்கும்!
வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய வேளையில் ஊடகங்களும், கார்ப்பரேட்டுகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வீதிகளில் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பின் ஆக்ரோஷ பிரகடனத்தை மறக்க இயலாது. இறுதியில் தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் அரசியல் உணர்வை அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்கு தேசிய கட்சிகள் தள்ளப்பட்டன. இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கலாம் என மண்டல் கமிஷன் சிபாரிசு செய்த போதிலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகம் அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். இந்தியாவில் முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதற்கு அரசியல் சட்டம் தடையாக இருக்கவில்லை. ஆனால், அதற்கான அரசியல் ரீதியான துணிச்சல் எவருக்கும் இருக்கவில்லை.
தென்னிந்திய மாநிலங்கள்தாம் இதில் முன்மாதிரியாக திகழ்ந்தன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்தின. தமிழகத்தில் 3.5 சதவீதமும், கர்நாடகாவில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பொழுது அதன் பெயரால் சச்சரவுகள் எழவில்லை. கேரளா மாநிலத்தில் அரசு பணிகளில் 12 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை முஸ்லிம்களை ஒ.பி.சியில் உட்படுத்தி இதர மாநிலங்களும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி இருக்கலாம். 19 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பியில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் பலன் குறைந்த அளவே முஸ்லிம்களுக்கு கிடைத்தது. 32 ஆண்டுகள் இடதுசாரிகளால் ஆளப்பட்ட மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்லிம்களின் சதவீதம் 24 சதவீதம் ஆகும். ஆனால் இடதுசாரிகள் ஆட்சியிலிருந்து விலகுவதற்கு சற்று முன்புதான் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாக அறிவித்தனர்.
வட இந்தியாவில் தலித், பிற்படுத்தப்பட்ட அரசியல் வலுப்பெற்ற போதிலும் முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். தற்பொழுது அடித்தளத்திலிருந்து சில அசைவுகள் முஸ்லிம் சமூகத்திடம் தென்படுகிறது. மே.வங்கத்தில் இதுவரை இடதுசாரிகளுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம்கள் மமதாவிற்கு அளித்தனர். அஸ்ஸாமில் முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களிக்காமல்  மவ்லானா அஜ்மலின் கட்சிக்கு வாக்களித்து எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். தொப்பி அணிந்தும், அஜ்மீர் தர்காவிற்கு நன்கொடை அளித்தும் முஸ்லிம்களை நம்மோடு நிறுத்தலாம் என கருதிய லாலுவின் திட்டமும் பீகாரில் செல்லுபடியாகவில்லை. உ.பியில் மாயாவதியும், முலாயமும் முஸ்லிம்களின் அசைவுகளை அடையாளம் காண்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு என கண்ணியமான வாழ்க்கையை தேடிய முஸ்லிம்கள் துவக்கியுள்ள போராட்டத்தின் ஒரு பகுதிதான் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை.
பிரிவினைக்கு பிறகும் இந்தியாவில் வாழ தீர்மானித்த ஒரு சமூகத்திற்கு இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இழைத்த அநீதியின் சுட்டெரிக்கும் உண்மைகளைத்தான் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் தங்களது ஆய்வில் வெளிக்கொணர்ந்தனர். தலித்துகளை விட மோசமான நிலையில் முஸ்லிம்கள் வாழ்வதாக சச்சார் கூறுகிறார். முஸ்லிம் சமுதாயம் தங்களது நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிச்செய்ய 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைச் செய்தது. கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் 41.6 சதவீதம் பேருக்கு  மாத வருமானம் 825/ ரூபாய் மட்டுமே என்ற உண்மையை ஆக்ஷன் எய்டும், இந்தியன் சோஷியல் இன்ஸ்ட்யூட்டும் நடத்திய புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவரானதும், ஹமீத் அன்ஸாரி துணை குடியரசு தலைவராக தொடர்வதும், குரைஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டதும், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற கான் வகையறாக்கள் பாலிவுட்டில் பிரபலமானதையும் சுட்டிக்காட்டி ஒரு மேதாவித்தனமான கேள்வியை எழுப்புகிறார்கள் – இவர்கள் எல்லாம் உயர் பதவிகளை எட்டியதற்கு இடஒதுக்கீடுதான் காரணமா? என்பதுதான் அக்கேள்வி.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றுவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடைபெறும் வேளையில் இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பி முஸ்லிம்களை சமாதானப்படுத்தலாம் என எவரும் கருதவேண்டாம். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையின் அடித்தளமே சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவமும், உரிமைகளுமாகும். அவர்களை புறந்தள்ளிவிட்டு எந்த சமூகமும் முன்னேற முடியாது.
ஆதலால் காங்கிரஸும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் செய்யவேண்டியது என்னவெனில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாகும். முஸ்லிம் வேடம்பூண்ட  ஷாநவாஸ் ஹுஸைன், முக்தா அப்பாஸ் நக்வி போன்ற எட்டப்பர்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டு அவர்கள் மூலமாக ஊளையிடும் பா.ஜ.க, சங்க்பரிவார்களின் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்துவிடக் கூடாது. இத்தகைய களத்து மேட்டு காளான்களை அதற்குரிய மதிப்புடன் புறக்கணிப்பதே சிறந்தது!

பின்லேடன் இருப்பும், மரணமும் யாருக்காக?


மே 2-ம் தேதி. அதிகாலை நேரம். பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இரண்டு மணிநேர பயண தூரத்தில் உள்ள அபோதாபாத் நகரத்தில் இருக்கும் காக்கூல் இராணுவ பயிற்சி மையத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் அந்த பெரிய கட்டிடத்தை நான்கு உலங்கு வானூர்தியில் வந்த 79 அமெரிக்க சீல்(seals) படையினர் தாக்குகின்றனர். நாற்பது நிமிடங்கள் நீடித்ததாகச் சொல்லப்படும் அந்த சண்டையின் இறுதியில் தமது இலக்கைத் தாக்கியழித்து விட்டு அமெரிக்க வீரர்கள் ‘வெற்றியுடன்’ திரும்புகின்றனர்.
அதற்குச் சற்று நேரத்தில் அமெரிக்க வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்திக்கும் பாரக் ஒபாமா, அமெரிக்கர்களுக்கு நீதி கிடைத்து விட்டது என்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக வலை வீசித் தேடி வந்த உலகின் நம்பர் ஒன் தீவிரவாதியான ஒசாமா பின்லேடனை அமெரிக்க வீரர்கள் அபோதாபாத்தில் நடந்த சண்டையில் கொன்று விட்டனர் என்று தெரிவிக்கிறார். அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொன்ற பயங்கரவாதிக்கான நீதியை வழங்கி விட்டதாகவும், ஆனாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான தமது போர் தொடரும் என்றும் அறிவிக்கிறார்.
அதைத் தொடர்ந்து இந்த விசயம் உலகெங்கும் உள்ள ஊடகங்களில் ஒரு பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. உலகத்தின் நாகரீக சமூகத்திற்கே ஆகப் பெரிய சவாலாக விளங்கிய படுபயங்கரமான தீவிரவாதி கொல்லப்பட்டதை உலகெங்கிலுமுள்ள முதலாளித்துவ ஊடகங்கள் கொண்டாடின. ஆனால், இவர்களுக்கும் முன்னதாக இந்த ‘நரகாசுரவதத்தைக்’ கொண்டாடத் துவங்கியது அமெரிக்கர்கள் தான். செய்தி வெளியானதும் வெள்ளை மாளிகையைச் சூழ்ந்து கொண்ட நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் ஆடிப் பாடி மகிழ்ந்துள்ளனர். தேசிய வெறி முழக்கங்களைத் தெரிவித்து மகிழ்ந்துள்ளனர்.
இன்னொரு பக்கம் பாகிஸ்தானில் திரளான மக்கள் ஒசாமா கொல்லப்பட்டதை அடுத்து அமெரிக்க எதிர்ப்புப் பேரணிகளை நடத்தியுள்ளனர். புனிதப் போராளியான ஒசாமா பின்லேடனுக்கு சொர்கத்தில் இடம் நிச்சயம் என்று சொல்கின்றனர். வசதியான வீட்டுப் பிள்ளையான ஒசாமா, இசுலாத்தையும் இசுலாமியர்களையும் காப்பதற்காகவே தனது சுகவாழ்க்கையைத் தியாகம் செய்து காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார் என்று இவர்கள் நம்புகிறார்கள். அமெரிக்கா என்றாலே இசுலாமிய எதிர்ப்பு என்பது பட்டவர்த்தனமாக நடந்து வரும் வேளையில் ஒரு சராசரி முசுலீம் கூட பின்லேடன் கொல்லப்பட்டது குறித்து வருந்துவார் என்பதில் ஆச்சரியமில்லை. அதைத் தவறாக எண்ணவேண்டிய அவசியமும் இல்லை.
பொதுவில் அமெரிக்காவின் இந்த சாகச நடவடிக்கையைப் போற்றிப் புகழும் ஊடகங்களை விடுத்துப் பார்த்தால், வெகு சில அமெரிக்க எதிர்ப்பு ஊடகங்களிலோ இது மொத்தமும் பெரிய மோசடியென்கிறார்கள். ஒசாமா பின்லேடன் ஏற்கனவே மரணமடைந்து விட்டாரென்றும், இப்போது அமெரிக்கா சொல்வதே பச்சையான பொய் என்றும் சொல்கின்றனர். சர்வதேசப் பெருமந்தம் என்கிற பெரும்  பொருளாதாரப் புதைகுழியிலும் ஆப்கான் போர் என்கிற இராணுவரீதியிலான புதைகுழியிலும் மீளமுடியாமல் சிக்கியிருக்கும் அமெரிக்கா, அதிலிருந்து  மக்களின் கவனத்தை திசை திருப்பவே இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருப்பதாகச் சொல்கிறார்கள்.
இவர்களில் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய், எதிர்வரும் தேர்தலுக்குள் சரிந்து போன தனது செல்வாக்கை நிமிர்த்தும் முகமாகவே பராக் ஒபாமா இப்படி ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் என்று சொல்கிறார்கள். ஒசாமா பின்லேடனை அமெரிக்கத் தயாரிப்பு என்று ஒப்புக் கொள்ளும் சிலரும் கூட, அவரால் அமெரிக்கா படுபயங்கரமான பாதிப்புக்குள்ளாகி விட்டதைப் போன்றும், அவர் அமெரிக்காவுக்கு தீர்க்க முடியாத ஒரு பெரும் சவாலாக விளங்கினார் என்றும் இப்போது படாதபாடெல்லாம் பட்டு அமெரிக்கா அவரைத் தீர்த்துக் கட்டியிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.
இந்த அம்சங்களை நாம் தனித்தனியே பிரித்துப் பார்த்து பொருள் கொள்ள முடியாது. ஒசாமா யாருக்காக வாழ்ந்தார் என்பதைப் புரிந்து கொள்வதில் இருந்து தான் அவர் யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். யாருக்காக செத்தார் என்பதை விளங்கிக் கொள்ளும் போது தான் எதற்காகச் சாக வேண்டும் என்பது தெரியவரும். இந்தப் பரிசீலனைகளின் நீட்சியாக எப்போது செத்தார் என்கிற ஆராய்ச்சியின் தேவையும் தேவையின்மையும் அதன் மெய்யான பொருளில் நமக்கு விளங்கும்.

ஒசாமா இறந்தாலும் ஆயிரம் பொன், இருந்தாலும் ஆயிரம் பொன்!

ஒப்பீட்டளவில் ஒசாமாவைக் காட்டிலும் உள்நாட்டு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்த சதாம் உசேன் பிடிபட்டதையும், விசாரணை என்கிற பெயரில் அவர் அவமானப்படுத்தப்பட்டதையும், பின்னர் அவர் அநீதியான முறையில் கொல்லப்பட்டதையும் வீடியோக்களாக ‘கசிய’ விட்டு ஈராக்கியர்களிடையே பயபீதியை ஏற்படுத்திய அமெரிக்கா, ஒசாமா கொல்லப்பட்டதும் அவரது உடலை வெளியே காட்டாமல் அவசர அவசரமாக கடலில் வீசியெறிந்து விட்டதாகச் சொல்கிறது.
ஒசாமாவைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட ஆப்பரேஷன் ஜெரோனிமா பற்றிய தகவல்களைக் கூட அமெரிக்க சி.ஐ.ஏவின் உயரதிகாரிகளும் வெள்ளை மாளிகளை அதிகாரிகளும் முன்னுக்குப் பின் முரணாகத் தான் சொல்லி வருகிறார்கள். ஒசாமாவோடு அவரது மனைவியும் மகனும் கொல்லப்பட்டார்கள் என்று ஆரம்பத்தில் சொன்னார்கள் – பின்னர் இல்லையில்லை அது அவரது கூட்டாளியின் மனைவியும் மகனும்  என்று மாற்றினார்கள். அடுத்து, ஒசாமாவே துப்பாக்கியை தூக்கிக் கொண்டு சண்டையிட்டார் என்றார்கள். ஒசாமாவின் உடல் நலிவைப் பற்றி ஊடகங்கள் எழுதத் துவங்கிய பின் இல்லையில்லை அவர் கைது நடவடிக்கையை எதிர்க்கும் விதமான செய்கைகளைச் செய்தார், எனவே தற்காப்புக்காக கொன்றோம் என்கிறார்கள்.
இப்படி மாற்றி மாற்றி அமெரிக்கர்கள் உளறிக் கொட்டுவதைச் சுட்டிக் காட்டும் சிலர், இது மொத்தமுமே ஒரு நாடகம் என்கிறார்கள். ஒசாமா 2001 டிசம்பரிலேயே கொல்லப்பட்டு விட்டதாகவும், தமது ‘தீவிரவாதத்துக்கு எதிரான’  போருக்கு மக்களிடையே ஒரு ஆதரவு தளத்தை உண்டாக்கவும், ஒசாமாவை மோசமான எதிரியாகச் சித்தரித்து அமெரிக்கர்களிடையே போருக்கு ஆதரவானதொரு பொதுக் கருத்தை காட்டமைக்கவே இத்தனை நாளும் அதை மறைத்தார்கள் என்று இவர்கள் கருதுகிறார்கள்.
இரட்டை கோபுரத் தகர்ப்புக்குப் பின் பகிரங்கமாக ஒசாமா வெளியே தலைகாட்டாமல் இருந்ததையும் அதன் பின் வெகு சில சந்தர்பங்களில் வெளியான அவரது வீடியோக்களின் நம்பகத்தன்மை சுயேச்சையான ஆய்வுகளில் (ஃபோரன்சிக் ஆய்வு) கேள்விக்குள்ளாக்கப் பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டும் இவர்கள், இப்போது ஆப்கானில் இருந்து வெளியேற முடியாமல் அமெரிக்கா தவிப்பதாகவும், போருக்கான செலவினங்கள் அதிகரித்து அமெரிக்கப் பொருளாதாரத்தின் கழுத்தை நெறிப்பதாகவும், இதனால் ஆப்கான் போரை ஒரு கவுரவமான வெற்றியாக சித்தரிக்கும் முகமாகவே இப்போது ஒசாமா கொல்லப்பட்ட நாடகம் நடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள். இது இன்னொரு பக்கத்தில் ஒபாமாவின் சரிந்து போன செல்வாக்கை உயர்த்தவும் பயன்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள்.
மேற்கண்ட வாதங்கள் முழுமையும் பொய் என்று ஒதுக்கிவிட முடியாது. ஆனால், ஒரு அடிப்படையான அம்சத்தை இவர்கள் காணத் தவறுகிறார்கள். போரிலிருந்து பின்வாங்குவது தான் அமெரிக்காவின் நோக்கம் என்றால், இப்போது லிபியாவின் மேல் ஏன் போர் தொடங்க வேண்டும்? அடுத்து சிரியாவின் மேல் ஏன் குறிவைக்க வேண்டும்? நிதர்சனம் என்னவென்றால்,ஏகாதிபத்தியம் போர்களில் இருந்து விலகுவதன் மூலம் தனது நெருக்கடிகளைத் தீர்த்துக் கொள்ள விளைவதில்லை – அது மேலும் மேலும் போர்களில் ஈடுபடுவதன் மூலமே தனது நெருக்கடிக்கான தீர்வை அடைய விரும்புகிறது. அதுதான் ஏகாதிபத்தியங்கள் உயிர்வாழ்தலின் ரகசியம்.
அதே நேரம் ஒசாமா கொலை பற்றி அமெரிக்கர்கள் மாற்றி மாற்றி முரண்பட்ட தகவல்களை அளிப்பதையும், 2007-க்குப் பிறகு ஒசாமா வீடியோ / ஆடியோ உள்ளிட்ட எந்த ரூபத்திலும் தலைகாட்டாத எதார்த்த உண்மையையும், இரட்டை கோபுரத் தகர்ப்பிற்குப் பின் நடந்ததாகச் சொல்லப்படும் ‘இசுலாமிய தீவிரவாத’ தாக்குதல்கள் எதையும் ஒசாமாவின் நேரடிக் கட்டளையின் பேரில் நடக்கவில்லை என்று ஏகாதிபத்தியவாதிகளே சொல்வதையும் நாம் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது.
ஆக, உண்மை என்பது இந்த இரண்டுக்கும் இடையில் தான் இருக்கிறது.
ஒசாமா 2001-ல் இறந்தாரா – இல்லை 2011-ல் இறந்தாரா என்பதைப் பற்றிய பரிசீலனைக்குள் போவதற்கு முன், ஒசாமா பின்லேடன் என்கிற பெயர், அதைச் சுற்றி கவனமாக கட்டப்பட்ட பிம்பம், அந்த பிம்பத்தைப் பற்றி அமெரிக்க மற்றும் உலக மக்களின் பொதுக்கருத்தில் முதலாளித்துவ ஊடகங்களால் தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்ட பயபீதி, இந்த பயபீதியினால் ஏற்பட்ட விளைவுகள் என்ன – அது யாருடைய நலனுக்கு சேவை புரிந்துள்ளது என்பதைக் குறித்து நாம் புரிந்து கொண்டால் தான் முந்தைய கேள்விக்கான பதில் நமக்கு விளங்கும்.
அமெரிக்க அரசின் இயக்கமும் அதன் செயல்பாடுகளும் – அந்தச் செயல்பாடுகளினால் விளையும் நன்மைகளும் முழுக்க முழுக்க பன்னாட்டு முதலாளிகளின் நலன் சார்ந்த ஒன்று. போர் என்பதை நாம் எப்படிப் பார்க்கிறோம்? போர் என்றால் அப்பாவி மக்கள் சாவார்கள். ஒன்றுமறியாத குழந்தைகள் அநியாயமாகச் சாவார்கள். போர் என்றால் ஒரு சமூகத்தின் சர்வநாசம். அதன் சமூகப் பொருளாதாரக் கட்டமைவின் பேரழிவு. இப்படித்தான் போரைப் பற்றி ஓரளவுக்கு விவரம் புரிந்தவர்கள் கூடப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். சரிதானே?
ஆனால், முதலாளிகளைப் பொருத்தளவில் போர் என்பது ஒரு அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம். போர் என்றால் ஆயுத விற்பனை – ஆயுத வியாபாரிகள் கொழிப்பார்கள். போரின் அழிவு என்றால் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு – கட்டுமானக் கம்பெனிகளின் கொழிப்பு. போரின் இறுதியில் தோற்றுப் போகும் நாட்டின் வளங்களின் மறுபங்கீடு. தமது பொருட்களுக்கான சந்தை. இதையெல்லாம் கடந்து வெல்லப்பட்ட நாட்டின் மீது வென்ற நாட்டின் மேலாதிக்கம்.
ஒசாமா பின்லேடன் என்று ஒருவர் இல்லாமல் போய் – இரட்டை கோபுரம் தகர்க்கப்படாமல் இருந்திருந்தாலும் கூட ஆப்கான் போர் என்பது சர்வ நிச்சயமாய் நடந்திருக்கும். அதற்கு இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பதையும் மனிதகுலத்துக்கே சவால் விடுக்கும் ‘படுபயங்கர’ சாத்தானாகச் சித்தரிக்கப்படும் ஒசாமா பின்லேடனையும் கடந்து பல்வேறு தேவைகளும் காரணங்களும் அமெரிக்காவிடம் இருந்தன. அந்தக் காரணங்கள் என்னவென்பதைப் பற்றி நாம் விரிவாக விளக்கும் முன்,  ஈராக் போருக்கான முக்கியமான காரணமாக அமெரிக்காவால் சொல்லப்பட்ட பேரழிவிற்கான ஆயுதங்கள் என்பது ஒருபோதும் ஈராக்கில் கண்டெடுக்கப்பட்டதில்லை என்பதை நீங்கள் கணக்கில் கொள்ள வேண்டும்.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஆப்கானும், அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், அல்-காய்தா, தாலிபான் உருவாக்கமும்: ஒரு சுருக்கமான வரலாறு!

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளாயிருந்த மத்திய ஆசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் நிலங்களின் அடியில் அள்ள அள்ளக் குறையாத இயற்கை வளங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உஸ்பெகிஸ்தானில் கொட்டிக் கிடக்கும் தங்கம், தஜிகிஸ்தானில் புதைந்து கிடக்கும் ஏராளமான வெள்ளி, கஜாக்கிஸ்தானின் யுரேனிய இருப்பு ஆகிவற்றைக் கடந்து, இந்நாடுகளின் நிலத்தினடியில் ஏராளமான இயற்கை எரிவாயு ரிசர்வும் உள்ளது. கஜாக்ஸ்தான், துர்க்மெனிஸ்தான், அசர்பெய்ஜான் ஆகிய நாடுகளில் மட்டும் சுமார் 6.6 டிரில்லியன் கன மீட்டர் எரிவாயு நிலத்தினடியில் இருக்கிறது.
கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கே ஈரான், வடமேற்கே துர்க்மெனிஸ்தான், வடக்கே உஸ்பெக்கிஸ்தான் மற்றும் தாஜிகிஸ்தான், வட கிழக்கே சீனாவின் ஜின்சியாங் மாநிலம் ஆகியவற்றைத் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கும் ஆப்கான் போர்தந்திர ரீதியில் ஒரு புவியியல் கேந்திரமான இடத்தில் அமைந்துள்ளது. மத்திய ஆசியாவின் எரிவாயுவை ஐரோப்பியச் சந்தைக்குக் கடத்திச் செல்ல வேண்டுமானால் ஒன்று ஈரான் வழியே கொண்டு சென்றாக வேண்டும் அல்லது ஜார்ஜியா வழியே கொண்டு சென்றாக வேண்டும்.
ஈரான் அமெரிக்காவுக்குப் படியாத நாடு என்பதைக் கடந்து, ஈரான் வழியே துருக்கியை குழாய் மூலம் இணைப்பது என்பது துருக்கிக்கும் ஈரானுக்கும் பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவானதொரு நட்புறவு தோன்றி விட அடிப்படையாய் அமைந்து விடும். ஈரானைத் தனிமைப்படுத்துவதைத் தனது அடிப்படையான மத்தியகிழக்குக் கொள்கையாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கு இது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்த கதையாகி விடும்.
ஜார்ஜியா வழியே குழாய் அமைக்கலாம் என்றால் அங்கே ஆயுந்தாங்கிய மாஃபியா கும்பலின் தொல்லை. அதுவுமின்றி ஜார்ஜியாவின் தெற்கு எல்லைப் பிராந்தியமான ஒஸ்ஸேடியாவை ரசியா சொந்தம் கொண்டாடுகிறது. இவ்விரு நாடுகளுக்குள்ளும் இருக்கும் எல்லைத் தகறாரின் காரணமாக ரசியா அவ்வப்போது ஜார்ஜியாவின் மேல் ராணுவத் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜார்ஜியாவை நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைப்பதையும் ரசியா எதிர்த்து வருகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் ரசியாவுக்கும் ஜார்ஜியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையாகத் தோற்றமளித்தாலும், ஜார்ஜியாவின் ஊடாக மேற்கு நாடுகள் எண்ணைக் குழாய் அமைத்து விடக் கூடாது என்பதில் ரசியா குறிப்பாக இருப்பது புரியும்.
இவ்விரு பாதைகளும் அடைபட்டதும் அமெரிக்காவின் முன் இருக்கும் எஞ்சிய வாய்ப்பு ஆப்கான் – பாகிஸ்தான் – அரபிக்கடல் என்கிற குழாய்ப் பாதை தான். மேலும் இது  மேலே சொல்லப்பட்ட இரண்டு பாதைகளையும் விட குறைந்த செலவு பிடிக்கக் கூடியது. அரபிக்கடலில் இருந்து ஐரோப்பியச் சந்தைக்கும் இந்தியச் சந்தைக்கும் கப்பல் மூலம் எண்ணையை ஏற்றுமதி செய்வது சுலபம். இறுதியாக அமெரிக்காவின் போட்டியாளர்களாக உருவெடுத்து வரும் ரசியா, சீனா இரண்டு நாடுகளையும் கண்காணிப்பதற்கும், பயமுறுத்துவதற்கும், தேவையான இராணுவத் தளங்களை ஆப்கானில் வைத்திருப்பதும் முக்கியமானது.
ஆப்கானின் புவியியல் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்திருந்ததால் தான் பனிப்போர் காலத்திலேயே சமூக ஏகாதிபத்தியமாய் சீரழிந்திருந்த சோவியத்திற்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஆப்கானைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் எழுபதுகளின் இறுதியில் ரசியாவின் கை ஓங்கியிருந்தது. அப்போது அங்கிருந்து ரசியாவை விரட்ட அமெரிக்கா பெற்றெடுத்த சொந்தப் பிள்ளைகள் தான் தாலிபானும் அல்-காய்தாவும்.
நாத்திகர்களான கம்யூனிஸ்ட்டுகளை இசுலாமிய மண்ணான ஆப்கானில் இருந்து விரட்டுவதற்காகப் பல்வேறு இசுலாமிய நாடுகளில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களைப் பாகிஸ்தானில் குவித்தது அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ. அங்குள்ள மதரஸாக்களில் வைத்து அவர்களுக்கு சித்தாந்தப் பயிற்சியும் ஆயுதப் பயிற்சியும் அளித்தது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐ.எஸ்.ஐ. இதற்கு தேவையான நிதி உதவியை அமெரிக்க அடிமைகளான சவுதி ஷேக்குகள் அளித்தனர். இப்படியாகத் தான் அரபு நாடுகளில் கட்டுமானத் தொழிலின் மூலம் பெரும் செல்வம் ஈட்டி சவூதி அரச குடும்பத்துக்கு நிகரான பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமா பின்லேடன் ஆப்கான் வந்திறங்கினார்.
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒசாமாவே சுகவாழ்க்கையை விடுத்து நாத்திகர்களை எதிர்த்து ஜிஹாத்தில் குதித்துள்ளார் என்கிற பிரச்சாரம் ஏழை முசுலீம்களிடம் சிறப்பாக எடுபடும் என்பது அமெரிக்காவின் கணக்கு. அமெரிக்காவின் அந்தக் கணக்கு தப்பவில்லை; ஆனால், அவர்கள் கணக்குப் பண்ணிப் பார்க்க வேண்டும் எண்ணியிராத எதிர்பாராத ஒரு இலக்கிலிருந்து தான் அடுத்த தாக்குதல் இறங்கியது. கம்யூனிச ‘அபாயத்தைக்’ களையும் நோக்கத்திற்காகப் அமெரிக்கா பெற்றுப் போட்ட தாலிபானும், அல்-காய்தாவும் தமது பிறவி நோக்கத்தை செவ்வனே நிறைவேற்றினர். எண்பதுகளின் இறுதியில் சோவியத் படைகள் ஆப்கானில் இருந்து பின்வாங்கின.
அல்-காய்தாவுக்கும் ஆப்கான் போரில் பங்கேற்க முஜாஹிதீன்களைத் திரட்டவும் இசுலாமிய நாடுகளின் இளைஞர்களிடையே ஒரு பிரச்சார முழக்கமாக அமெரிக்கா முன்வைத்திருந்த சித்தாந்தமான இசுலாமிய சர்வதேசியம் பூமராங் போல் திருப்பித் தாக்கும் சந்தர்பமும் உடனடியாக வந்து சேர்ந்தது அமெரிக்காவே எதிர்பார்த்திராத ஒரு சுவாரசியமான திருப்பம். ஆப்கான் போர் முடிந்து சவூதி திரும்பிய பின்லேடனை ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பு எதிர்கொள்கிறது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கத் தலையீட்டை பின்லேடன் எதிர்க்கிறார். ஈராக்கை தனது அல் காய்தாவையும் முஜாஹித்தீன்களையும் வைத்தே எதிர்கொள்ளலாம் என்கிற பின்லேடனின் விருப்பம் நிராகரிக்கப்படுகிறது. மேலும் சவூதி அரசின் அமெரிக்க விசுவாசமும் சவூதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்கப் படைகளும், வரலாற்று ரீதியிலான யூத இசுலாமிய முரண்பாடுகளின் பின்னணியில் பின்லேடனுக்கு இருந்த இசுரேல் எதிர்ப்பும், அதற்கு எண்ணை வார்க்கும் இசுரேலின் பிராந்திய ரவுடித்தனமும், அந்த ரவுடித்தனத்தில் குளிர்காய்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் தாதாத்தனமும் பின்லேடனுக்குள் ஆழமான அமெரிக்க எதிர்ப்புணர்வை  உண்டாக்குகிறது. இது பின்லேடனுக்குள் மட்டுமல்ல மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க அடிமை ஆட்சியாளர்களைத் தவிர்த்த இசுலாமிய மக்கள் அனைவருக்குள்ளும் உருவாகிறது.
என்னதான் அமெரிக்கத் தயாரிப்பாக இருந்தாலும் – அமெரிக்கப்  பாடதிட்டமான இசுலாமிய சர்வதேசியத்தைப் பயின்றிருந்தாலும் பின்லேடன் அதை உணர்வுப்பூர்வமாக பற்றி நின்றிருக்கிறார். இங்கே பின்லேடனிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் பொதுவில் உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்டுகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடம் வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வும் அடிப்படையிலேயே வேறு வேறானது. பின்லேடனிடமோ தாலிபானிடமோ வெளிப்படும் அமெரிக்க எதிர்ப்புணர்வு என்பது மக்கள் விடுதலை உரிமை என்கிற அடித்தளத்தின் மீது கட்டப்பட்டதல்ல – அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தில் இசுலாமை மாற்றீடு செய்ய வேண்டும் – இழந்த தமது மேண்மையை மீட்க வேண்டும் என்கிற நோக்கத்தின் மீது கட்டப்பட்டது. அரபுலகில் மக்களது ஜனநாயகம் தழைக்க வேண்டுமென்பது அல் காய்தாவின் கோரிக்கையல்ல. அங்கிருக்கும் ஆட்சியாளர்களைத் துறத்திவிட்டு தூய இசுலாமிய சர்வாதிகாரத்தை நிறுவுவதுதான் அவர்களது நோக்கம்.
அதன் பின் 1996-ல் ஆப்கான் திரும்பும் ஒசாமா, தாலிபான்களின் பராமரிப்பில் தனது அமெரிக்க எதிர்ப்புப் போருக்கு ஆயத்தமாகிறார். தாலிபானின் பச்சையான மனித உரிமை மீறல்கள் மற்றும் காட்டுமிராண்டித் தனமான சட்டங்களின் காரணமாக அமெரிக்காவால் ஆப்கான் அரசை வெளிப்படையாக அங்கீகரிக்க முடியா விட்டாலும் அமெரிக்க அடிவருடிகளான பாகிஸ்தானும் சவூதியும் ஆப்கானை அங்கீகரித்திருந்தன. இவர்கள் மூலம் அமெரிக்கா ஆப்கானுடன் தொடர்புகளைப் பேணிக் கொண்டிருந்தது. எண்ணை ஒப்பந்தங்களுக்காக தாலிபான்களின் பிரதிநிதிகள் அமெரிக்காவுக்கும் சென்றுள்ளனர்.
வெளிப்படையான அமெரிக்க எதிர்ப்பு மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான பின்லேடனின் போரை ஆரம்பத்தில் தாலிபான்கள் தங்கள் சொந்தப் பிரச்சினையாகக் கருதவில்லை. முல்லா ஓமர் 98-ன் மத்தி வரையில் பின்லேடனின் இந்த முடிவை எதிர்த்துள்ளதாக அவரை மூன்று முறை பேட்டி கண்ட பாக்கிஸ்தான் பத்திரிகையாளர் ரஹிமுல்லாஹ் யூஸுஃப்ஸாய் தெரிவிக்கிறார். ஆனால் இந்த முரண்பாடு ஓரளவுக்கு மேல் நீடிக்க முடியவில்லை. தூய இசுலாமிய அடிப்படைவாதத்தின் மேல் கட்டப்பட்ட தாலிபான்களும் அவர்களின் முஜாஹித்தீன்களும் ஓரளவுக்கு மேல் அமெரிக்காவோடு உறவாடுவது அவர்களின் அடிப்படையையே அசைத்து விடக்கூடிய அபாயம் கொண்ட விளையாட்டு. தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் ஆப்கானில் இருந்தவாறே பின்லேடன் அமெரிக்கத் தூதரகங்களின் மேல் தொடுத்த தாக்குதல்களை தாலிபான்கள் தடுக்கவில்லை. பின்லேடனின் சர்வதேசிய இசுலாமிய முன்னணியின் செயல்பாட்டையும் முடக்கவில்லை.
இது ஆப்கானை எளிதில் மேய்ந்து விட்டுப் போய்விடலாம் – அதைத் தொடர்ந்து மத்திய ஆசிய எண்ணை வயல்களை சுலபத்தில் வளைத்துப் போட்டு விடலாம் – என்றெல்லாம் நாக்கில் எச்சில் ஊற கணக்குப் போட்டுக் காத்திருந்த அமெரிக்காவுக்கு ஆத்திரத்தைக் கிளப்புகிறது. தொண்ணூறுகளின் இறுதியிலிருந்தே ஆப்கானைத் தாக்கிக் கைப்பற்ற அமெரிக்கா தருணம் பார்த்துக் காத்துக் கிடந்த நிலையில் தான் இரட்டை கோபுரத் தகர்ப்பு நடக்கிறது.
உலக வரலாற்றில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் இந்தத் தாக்குதலை அல் காய்தா நிறைவேற்றியதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த தாக்குதல் நடப்பதை அமெரிக்க அறிந்து தனது அரசியல் நோக்கத்திற்காக வேண்டுமென்றே  நடக்க அனுமதித்தது என்றெல்லாம் கூட சிலர் கூறுகின்றனர். எது எப்படியோ இந்த தாக்குதலை வைத்து அமெரிக்கா அறுவடை செய்த அரசியல் நடவடிக்கைகள்தான் நம்மைப் பொறுத்த வரை முக்கியமானது.
ஆப்கானின் மேலான அமெரிக்க நிலைப்பாடு பற்றியெறியத் தயாரான நிலையில் இருந்த காய்ந்து போன வைக்கோல் போர் என்றால், இரட்டை கோபுரத் தகர்ப்பு என்பது அதன் மீது விழுந்த சிறு பொறி. அதன் பின் அமெரிக்கா தீவிரவாதத்திற்கு எதிரான தனது போரைத் துவக்குகிறது. அதுவரை தானே தனது நலனுக்காக ஊட்டி வளர்த்த இசுலாமிய சர்வதேசியத்தையும் முஜாஹிதீன்களையும் இப்போது புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப தனது நலனுக்காகவே வில்லனாகச் சித்தரிக்கத் துவங்கியது  அமெரிக்கா. இப்படித்தான் விடுதலைப் போராளிகள், பயங்கரவாதிகளாக மறு நாமகர்ணம் சூட்டப்பட்டார்கள்.
தீவிரவாத ஒழிப்பு என்கிற பெயரில் முதலில் ஆப்கான் மேலும் அதைத் தொடர்ந்து ஈராக் மேலும்  குண்டுகளைப் பொழிந்ததும், அவற்றைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததையும், அப்போரில் அநியாயமாய்க் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான அப்பாவிகள் பற்றியும் நீங்கள் கேள்விப்படாமல் இருந்திருக்க மாட்டீர்கள் – ஆனால், இதில் நீங்கள் கேள்விப்படாத இன்னொரு அம்சமும் இருக்கிறது. ஆப்கான் போருக்காக மட்டும் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை அமெரிக்கா செலவிட்டு வருகிறது. இன்றைய நிலையில் ஈராக் மற்றும் ஆப்கான் போர்களுக்காக சுமார் 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது.
அமெரிக்கர்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படும் இத்தொகையானது ஆயுதக் கம்பெனி முதலாளிகளும், கட்டுமானக் கம்பெனி முதலாளிகளுக்கும், எண்ணைக் கம்பெனிகளுக்கும் தான் பாய்ச்சப்படுகின்றன. இது இந்தப் போரின் பொருளாதார முகம்  என்றால், இந்தப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிறுவியுள்ளது அதன் இராணுவ முகம்.
ஆக, இசுலாமிய தீவிரவாதம் என்கிற வளர்த்த கடா அமெரிக்கா விரும்பிய திசையில் பாய்ந்த போதும் சரி  – திரும்பி அமெரிக்காவின் மார்பிலேயே பாய்ந்த போதும் சரி; அதன் பலன்கள் என்னவோ அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கும் அதன் ஆன்மாவாக இருக்கும் அமெரிக்க முதலாளிகளுக்கும் தான்.
இந்தப் போரின் ஒரு இடைக்கட்டமாக இப்போது ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருந்தாலும், அந்த வாக்கியத்தின் இறுதிப் பகுதியான ‘தீவிரவாதத்திற்கு எதிரான போர் இன்னமும் ஓயவில்லை’ என்பதே நமது அக்கறைக்கும் கவனத்திற்கும் உரியதாகும். கடந்த பத்தாண்டுகளாக போதுமான அளவிற்கு ஒசாமா பின்லேடன் என்கிற பூச்சாண்டியைக் காட்டிக் காட்டியே அமெரிக்கர்களிடம் பயபீதியை உண்டாக்கி ஒரு பொதுக்கருத்தை கட்டமைத்து போர் நடத்தியாகிவிட்டது. இப்போது எதார்த்தம் சாமானிய  அமெரிக்கர்களைச் சுடும் நேரம் வந்து விட்டது.
இனிமேலும் இந்தப் பூச்சாண்டியைக் காட்டி கிளைமேக்சே இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க பட்ஜெட்டிலும் மக்கள் நலத்திட்டங்களைச் சுருக்கி நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை முதலாளிகளுக்குப் படையலிட்டுக் கொண்டிருக்க முடியாது. அதவாது மக்கள் தொட்டறியத்தக்க ஒரு வெற்றி வேண்டும். ஆக, அமெரிக்கா நடத்தி வரும் மெகா சீரியலில் இப்போதைக்கு ஒரு வில்லனைக் காவு கொடுத்து நேயர்களை கொஞ்சம் மகிழ்ச்சிப் படுத்தியாக வேண்டிய தருணம் வந்துள்ளது – ஒசாமா வதமும் நிகழ்ந்துள்ளது.
பின்லேடன் கொல்லப்பட்டதை அறிவித்த பராக் ஒபாமா, அந்த வாக்கியத்தின் இறுதியிலேயே போர் இன்னமும் முடியவில்லை என்பதைத் தெளிவாக அறிவித்திருக்கிறார். இனிமேல் வெறுமனே தீவிரவாதத்தை மட்டுமே  எதிர்த்துப் போர் புரிந்து கொண்டிருப்பது என்பது சராசரி அமெரிக்கர்களின் பொதுக்கருத்தைத் திரட்டுவதற்குப் போதுமான அளவுக்குப் பயனளிக்காது. எனவே, தீமையை அழித்த நன்மையானது அடுத்து தனது நிலையை ஸ்திரப்படுத்திக்  கொள்ள வேண்டுமல்லவா? எனவே எங்கெல்லாம் நன்மை போதுமான அளவுக்கு இல்லையோ அங்கெல்லாம் அமெரிக்க ஏவுகணைகள் நன்மையின் நற்செய்தியைச் சுமந்து செல்கின்றன. லிபியாவிலும், சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் இப்படித்தான் நியாயப்படுத்தப்படுகின்றன – அதாவது ‘மனிதாபிமான அடிப்படையிலான’ தலையீடு.
சீரியலின் ஒரு எபிசோடில் இருந்து அடுத்த எபிசோடுக்குச் செல்லும் முன் ஒரு சுப முடிவு தேவை – அந்த சுப முடிவு தான் தீமையின் வடிவமான ஒசாமா பின்லேடனின் கொலை. இதில் ஒசாமா இப்போது செத்தாரா முன்பே செத்தாரா என்பதற்குள் நாம் விரிவாக ஆராயத் தேவையில்லை.  இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின் கடந்த பத்தாண்டுகளில் ஒசாமா பின்லேடன் என்கிற பெயர் அமெரிக்காவுக்கு அள்ளிக் கொடுத்தது என்னவென்பதும் இப்போது கொல்லப்பட்ட பின் அள்ளிக் கொடுக்கப்போவது என்னவென்பதும் தான் நமது கவனத்திற்குரியது. ஒருவேளை முன்பே செத்திருந்தாலும் அது அமெரிக்க நலன்களுக்கே பயன்பட்டுள்ளது – இப்போது செத்ததும் அமெரிக்க நலன்களுக்கே பயன்படப் போகிறது.
கடந்த பத்தாண்டுகளாக அமெரிக்க முதலாளிகளுக்குப் பொன்முட்டையிடும் வாத்தாக இருந்த அமெரிக்காவின் தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான ஒரு நொண்டிச் சாக்காக ஒசாமா இருந்தார் என்றால் இனி அடுத்து வரப்போகும் ‘நல்லெண்ண அடிப்படையிலான’ போர்களுக்கு அமெரிக்கர்களை உளவியல் ரீதியில் தயார்படுத்த இப்போது செத்துள்ளார்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது போல் ஒசாமா பின்லேடனின் வாழ்வும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே இருந்தது – இப்போது அவரது சாவும் அமெரிக்க நலன்களுக்குச் சேவை செய்வதாகவே அமைந்துள்ளது.

யார் பயங்கரவாதி? அல் காய்தாவா, அமெரிக்காவா?

பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அச்செய்தியை வெள்ளை மாளிகையில் வைத்து செய்தியாளர்களுக்கு அறிவித்த பராக் ஒபாமா, அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் அநியாயமாகக் கொன்ற ஒரு பயங்கரமான தீவிரவாதியை ஒழித்து நீதியை நிலைநாட்டி விட்டதாகவும், இத்தோடு நில்லாமல் தீவிரவாதத்திற்கு எதிரான அமெரிக்கப் போர் தொடரும் என்றும் அறிவித்துள்ளார். அதாவது இதுவரை நிலைநாட்டியதைக் கடந்து இன்னமும் நிலைநாட்டப்படுவதற்கு இன்னமும் நீதியை அமெரிக்கா ஸ்டாக் வைத்துள்ளது என்பதே அந்த அறிவிப்பின் உள்ளார்ந்த அர்த்தம்.
பராக் ஒபாமாவின் வார்த்தைகள் ஒரு அம்சத்தில் உண்மையானது தான் – அதாவது அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் கொல்பவன் ஒரு பயங்கரமான தீவிரவாதியாகத் தான் இருக்க முடியும். அவன் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்கிற ஒபாமாவின் ஆசையைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது – அது நியாயமானது தான். எமது ஆசையும் கூட அதுவே தான். நாம் எமது வாசகர்களையும் பொதுமக்களையும் ஒபாமாவின் இந்த ஆசையை நிறைவேற்றி வைக்குமாறு கோருகிறோம். ஆனால், ஒசாமா பின்லேடன் ஒழிந்த பின் இப்போது உலகிலேயே பயங்கரமான தீவிரவாதி யாராக இருக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். அது நியாயமானது தான். எனவே அப்படியொரு தீவிரவாதியை உங்களுக்கு அறிமுகம் செய்து வைப்பது வினவின் தலையாய கடமையாக  கருதுகிறோம்.
இந்த பயங்கரவாதியை நீங்கள் லேசில் எடை போட்டு விடலாகாது. உலகின் அத்துனை கண்டங்களிலும் அதன் சகல மூலைகளிலும் இந்த பயங்கரவாதி கால் வைத்த இடத்திலெல்லாம் சர்வநாசத்தை விளைந்துள்ளான். அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்பட்டுள்ளனர். இளம் பெண்கள் தம் பெற்றோர் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்டுள்ளனர். தாய்மார்கள் தமது பிள்ளைகள் முன்பே மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். ஒன்றுமறியாத சிறு பிள்ளைகள் இந்த பயங்கரவாதி வீசிய குண்டுகளில் சிதைந்து போயுள்ளன. கருவிலிருக்கும் சிசு வரையில் ஊடுருவும் வீரியம் மிக்க அந்த குண்டுகளினால் பிறக்கும் குழந்தைகள் உருவமற்ற வெறும் சதைக்கோளங்களாகப் பிறந்துள்ளன.
ஒசாமா பின்லேடனாவது எந்த நீதிமன்றத்தாலும் விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டவனில்லை – ஆனால், நாங்கள் அடையாளம் காட்டுவதோ சர்வதேச நீதிமன்றத்தாலேயே குற்றவாளி  என்று தீர்ப்பளிக்கப்பட்ட பயங்கரவாதியை. இன்னமும் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக உலாவும் அந்தத் தீவிரவாதி வேறு யாரும் இல்லை – அது அமெரிக்கா தான். உலகெங்கும் ஒரு ஆக்டோபஸின் கரங்களைப் போல் விரியும் அமெரிக்காவின் பயங்கரவாதக் கொலைக் கரங்கள் விளைவித்த சர்வநாசங்களைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பை இங்கே வழங்குகிறோம். முதலில் அமெரிக்காவின் கொல்லைப்புறமான லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து துவங்குவோம்.
அமெரிக்க பயங்கரவாதம்

அமெரிக்க பயங்கரவாதம் – தென் அமெரிக்க சாட்சியங்கள்!

வட அமெரிக்க கண்டத்தையும் தென்னமெரிக்க கண்டத்தையும் இணைக்கும் மெல்லிய நிலப்பரப்பில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறிய நாடு நிகரகுவா. 1936-ல் தொடங்கி சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அந்நாட்டைத் தன் இரும்புப் பிடிக்குள் வைத்திருந்தது சோமோசா சார்வாதிகார கும்பல். இன்றைக்கு உலகமக்களுக்கு ஜனநாயக விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் இதே யோக்கிய அமெரிக்கா தான் அன்று மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருந்த சோமோசா கும்பலுக்கு உற்ற பங்காளி.
காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை உணர்வுகள் ஒரு பௌதீக வடிவமாக ஸான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் வடிவில் உருக்கொண்டு எழுந்து சூறாவளியாய்ச் சுழன்றடித்ததில் சோமோசா குடும்பத்தின் கடைசி வாரிசும் அப்போது அதிகாரத்திலிருந்த கொடும் சர்வாதிகாரியுமான அனடேஸியோ சோமோசா டெபாயேல் 1979-ம் ஆண்டு அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்டார். மக்களின் விடுதலை உணர்வுகள் வெற்றி பெற்றால் என்ன நடக்கும் என்பதை அமெரிக்கா உணர்ந்திருந்தது. 77-ம் ஆண்டே இதை முன்னறிந்திருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர் இராணுவ உதவிகளை வழங்கியிருந்தார். ஆனாலும் சுழன்றடித்த மக்களின் கோபக் கனலில் சோமோசா சர்வாதார ஆட்சி கவிழ்ந்து சான்டினிஸ்ட்டா புரட்சியாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றினர்.
அதிகாரத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சோமோசா கும்பலுக்கு விசுவாசமான கூலிப்படையினரைப் பொறுக்கியெடுத்த அமெரிக்க உளவுத்துறையான சி.ஐ.ஏ, அவர்களுக்கு கான்ட்ராஸ் என்று பெயரிட்டு பயங்கரவாத நாசவேலைகள் செய்வதற்கு பயிற்றுவித்தனர். இதற்காகவே “ஸ்கூல் ஆப் அமெரிக்கானாஸ்” என்கிற பயங்கரவாத பயிற்சிப் பள்ளிகளை நடத்தி வந்துள்ளது அமெரிக்கா. 1946-ல் துவங்கப்பட்ட இந்த பயங்கரவாதப் பயிற்சிப் பள்ளியில் வைத்து தான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஒசாமாவுக்கே அப்பன்மார்களையெல்லாம் அமெரிக்கா விரிவாகப் பாடம் நடத்திப் பயிற்றுவித்து உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது.
சுமார் 60,000 பங்கரவாதிகளை உருவாக்கிய இந்தப் பள்ளியை உள்நாட்டில் கிளம்பிய எதிர்ப்புகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் டிசம்பர் 2000-ல் இழுத்து மூடிய அமெரிக்கா ஒரே மாதத்தில் – 17 ஜனவரி 2001-ல் – மேற்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான பயிற்று மையம்  (Western Hemisphere institute for security cooperation) என்கிற பெயரில் மீண்டும் திறந்துள்ளது. நிகரகுவா மட்டுமின்றி, எல்சால்வடாரில் இயங்கிய கொலைப்படை, பனாமாவின் கொடூர சர்வாதிகாரி மானுவேல் நொரியேகா, கொலம்பியாவின் மாஃபியா கும்பல்கள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகளையும் பயங்கரவாத கும்பலையும் பெற்றெடுத்துள்ளது இந்தப் பள்ளி.
அமெரிக்க செனேட்டரான ஜோஸப் கென்னடியின் கூற்றுப்படி, சுமார் பதினோரு இலத்தீன் அமெரிக்கச் சர்வாதிகாரிகள் இந்தப் பள்ளியிலிருந்து தான் பயிற்றுவிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர். மேலும் அவர், உலகிலேயே அதிகளவிலான கொடூர சர்வாதிகாரிகளைத் தோற்றுவித்த ஸ்தாபனம் இதுவாகத் தான் இருக்கும் என்று பெருமை பொங்க குறிப்பிடுகிறார். கம்யூனிஸ்ட்டுகளையும் புரட்சியாளர்களையும் எப்படித் தேடித் தேடிக் கொலை செய்ய வேண்டும், மாட்டிக் கொண்ட அப்பாவிகளை எப்படிச் சித்திரவதை செய்ய வேண்டும், கைது செய்த அரசியல் கைதிகளை எப்படித் துன்புறுத்தி விசாரிக்க வேண்டும், ஒரு சிவில் சமூகத்தில் நாசவேலைகளைச் செய்வது எப்படி என்பதெற்கெல்லாம் விரிவாக கோனார் நோட்ஸ் போட்டு பாடம் நடத்தியுள்ளார்கள். பொறுமையும் மனதைரியமும் இருந்தால் அவற்றில் ஒன்றை நீங்களும் வாசித்துப் பார்க்கலாம்.  அமெரிக்க சி.ஐ.ஏவின் இது போன்ற பயங்கரவாதக் கையேடுகள் இணையத்தில் நிறையக் கிடைக்கிறது.
பயிற்றுவிக்கப்பட்டு களத்தில் இறக்கிவிடப்பட்ட அமெரிக்காவின் இந்த ‘மாணவப்’ படை அப்பாவி மக்கள் மேல் கட்டவிழ்த்து விட்ட பயங்கரங்கள் சொல்லில் வடிக்க முடியாதளவுக்கு ரத்தக் கவுச்சி வீசும் சொல்லொணாத் துயரங்கள். இது பற்றி பதிவு செய்துள்ள நோம் சோம்ஸ்கி
“நிகரகுவாவில் அமெரிக்க அரசால் இயக்கப்பட்ட காண்ட்ரா கொலைப்படையாகட்டும், கவுதமாலா, எல்சால்வடாரில் செயல்பட்ட நமது பினாமி பயங்கரவாதிகளாட்டும், அவர்கள் சாதாரண முறையில் கொலை செய்வதில்லை… குழந்தைகளைப் பாறையில் மோதிக் கொல்வது, பெண்களின் மார்புகளை அறுத்துத் தலைகீழாகத் தொங்கவிட்டு ரத்தம் வெளியேறிச் சாகச் செய்வது, தலையைச் சீவிவிட்டு முண்டத்தை மட்டும் கழுமரத்தில் சொருகி வைப்பது என அனைத்துமே கொடூரமான வக்கிரமான முறைகள்”
பாதிரியாரான சாண்டியாகோ சொல்வது நமது முதுகெலும்பைச் சில்லிட வைக்கிறது -
“சதைகள் பிய்ந்து எலும்பு தெரியும் வரை குழந்தைகளை முள் கம்பிகளின் மேல் புரட்டி இழுத்து அந்தக் காட்சிகளைக் காணுமாறு பெற்றோர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்” இந்தக் கொடூரங்களைச் செய்ய பக்குவப்படுத்தும் பயிற்சி முறைகளை அமெரிக்காவே முன்னின்று கற்றுக் கொடுத்துள்ளது. எல்சால்வடாரின் கொலைப்படையில் இருந்து மன உளைச்சல் தாளாமல் தப்பியோடி வந்த ஒரு அகதி இதை 1990-ம் ஆண்டு அமெரிக்க நீதி மன்றத்திலேயே சாட்சியமாகப் பதிவு செய்துள்ளார்.
“சேரிகளுக்குள் புகுந்து 13, 14 வயது சிறுவர்களை போலீசு அள்ளிக் கொண்டு போகும். அவர்களுக்குப் பயிற்சி முகாமில் கொலை, கற்பழிப்பு, சித்திரவதை ஆகியவைகளை ஒரு மதச் சடங்கைப் போலப் பயிற்றுவிப்பார்கள். ‘மாணவர்கள்’ நாய்களையும் பருந்துகளையும் கழுத்தை முறித்து, பற்களால் தொண்டையைக் கடித்தே கொலை செய்யப் பழக வேண்டும். வெறும் மிருகங்களை வைத்து மட்டும் செய்முறை பயிற்சி அளிக்கப்படவில்லை. தமது ‘மாணவர்களின்’ திறன் வெறும் மிருகங்கள் பறவைகள்  எனும் அளவில் மட்டும் சுருங்கி விடக்கூடாது என்பதில் அமெரிக்கா மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறது.
பதிமூன்று ஆண்டுகளாக சி.ஐ.ஏ அதிகாரியாகப் பணியாற்றிய ஜான் ஸ்டாக்வெல் இது போன்ற செய்முறைப் பயிற்சிகளைப் பற்றி அளித்த பேட்டியொன்றில் மாணவர்களைத் தயாரிக்கும் முறைகளை விவரமாக பதிவு செய்துள்ளார். “சித்திரவதை முறைகளைக் கற்றுக் கொடுக்கலாம். ஆனால், மாணவர்கள் தம் சொந்தக் கைகளால் அதைச் செய்து பழக வேண்டுமே. எனவே தெரிவுலிருக்கும் அனாதைகள், பிச்சைக்காரர்கள் ஆகியோரை அள்ளிக் கொண்டு வருவோம். அவர்கள் தான் எங்கள் சோதனைச் சாலை எலிகள்”
“மெல்லிய உறுதியான மின் கம்பியை பற்களுக்கிடையில் நுழைத்து விட்டு இன்னொரு முனையை ஆண் குறியில் முடுக்கி விட்டு மின்சாரத்தைச் செலுத்துவார்கள். துன்பம் தாங்காமல் அவர்கள் கதறுவார்கள். அரசியல் கைதிகளாயிருந்தால் “நிறுத்து. உண்மையைச் சொல்லிவிடுகிறேன்” என்று அலறக் கூடும். இந்த அனாதைகளுக்கோ தம்மை ஏன் சித்திரவதை செய்கிறார்கள் என்பதே தெரியாது. எனவே கதறுவதைத் தவிர அவர்களால் வேறொன்றும் செய்ய இயலாது”
“வலி தாங்காமல் துடித்து மயங்கி விழுந்தவுடன் டாக்டர் வருவார். இந்த ‘சோதனைச் சாலை எலிகளுக்கு’ வைட்டமின் ஊசி போட்டு ஓய்வெடுக்க வைப்பார். சிறிது நேரத்திற்குப் பிறகு அடுத்த வகுப்புக்கு எலிகள் தயாராக வேண்டும்”
“ஒரு கட்டத்தில் அவர்கள் செத்துப் போவார்கள். அவர்களது பிணமும் பயன்படும். பிணத்தை நகரத்தின் நடுவீதியில் வீசியெறிவோம். பிணத்தைப் பார்க்கும் மக்கள் ‘அரசாங்கம் – போலீசு’ என்று நினைத்தாலே குலை நடுங்குவார்கள்”
தற்போது அமெரிக்காவின் ஆசி பெற்ற ‘ஜனநாயகப்’ போராளிகள் லிபியாவில் இப்படித்தான் சண்டை போடுகின்றனர். உயிரோடு லிபிய இராணுவச் சிப்பாயை தலைகீழாக் கட்டி தொங்கவிட்டு நெஞ்சைப் பிளந்து இதயத்தை அப்படியே பிடுங்குகிறார்கள். யூ டியூபில் இந்தக் காட்சியைப் பார்ப்போர் உடைந்து போவது நிச்சயம்.
கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் எதற்கெடுத்தாலும் அமெரிகாவைக் குறை சொல்கிறீர்களே என்று சலித்துக் கொள்ளும் சில அறிவாளிகள் இதயத்தில் ஈரமும் கண்களில்  கொஞ்சமாவது கண்ணீரும் மிச்சமிருந்தால் அந்தத் தென்னமெரிக்க அப்பாவிகளுக்காக அது வடியட்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியைக் குறைத்து, தனது சொந்த மக்களைத் தவிக்க விட்டு, அவர்களின் வரிப்பணத்திலிருந்து தான் இது போன்ற படுபயங்கரவாதச் செயல்களுக்கு நிதி ஒதுக்குகிறது அமெரிக்கா.

முழு உலகிலும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ரத்தச் சுவடுகள்

தென்னமெரிக்க கண்டம் மட்டுமல்ல, கொரியப் போர்களில் வீசப்பட்ட நாபாம் குண்டுகளும், வியட்நாமில் வீசப்பட்ட கொத்துக் குண்டுகளும் கருக்கியெறிந்த கனவுகளும் மக்களின் வாழ்க்கையும் எண்ணிலடங்காதவை. தென்னமெரிக்க அனாதைகள் மட்டுமா அமெரிக்காவின் பயங்கரவாதப் பள்ளிகளுக்குச் சோதணைச் சாலை எலிகள்? கொரியாவின் தேசிய விடுதலைக்காக ஜப்பானை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுப் போராளிகள் மேல் நாபாம் குண்டுகளையும் பல்வேறு உயிரி ஆயுதங்களையும் வீசி அமெரிக்கா நடத்திய சோதனையின் விளைவு மட்டுமே ஒரு லட்சம் உயிர்கள் பலி. இன்னும் வியட்நாம், யுகோஸ்லோவியா, ஈராக், ஆப்கான், லிபியா என்று அதன் பாவ மூட்டைகளை ஒன்றாகக் குவித்தால் அது இந்த பூமிப் பந்தை விட அளவில் பெரிதாய் இருக்கும்.
ஈராக்கின் மேல் இராணுவத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் இருக்கும்  என்றால் அதற்கும் முன்பிருந்தே பொருளாதாரத் தாக்குதல் நடத்திக் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அத்தியாவசிய மருந்துகளைத் தடுத்ததன் மூலம் மட்டுமே ஐந்து லட்சம் அப்பாவிக் குழந்தைகளை ஈராக்கியர்கள் பறிகொடுத்திருக்கிறார்கள். பாலைவன தேசமான ஈராக்கில் கடல் நீரைச் சுத்திகரிக்கும் தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களை இறக்குமதி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் காலரா போன்ற நோய்களுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை தனி கணக்கு.
சிதறி ஓடுபவர்களை துரத்தித் துரத்திக் கொல்ல கொத்து குண்டுகள் என்றால், நிலத்தினடியில் பதுங்கிக் கொண்டிருப்பவர்களைக் கொல்ல, நிலத்தையே இருபதடிகள் வரை ஊடுருவித் தாக்கும் டொமஹாக் ஏவுகணைகள் – கருவிலிருக்கும் குழந்தைகளைத் தாக்கியழிக்க அணுக் கழிவு ஏவுகணைகள் என்று ரகரகமாக ஈராக்கிலும் ஆப்கானிலும் குண்டுகளை பொழிந்துள்ளது அமெரிக்கா. ஈராக்கியர்களின் தோல்வியின் ரணம் என்பது சிலவருடங்களில் ஆறிப் போவதல்ல – அது அணு ஆயுத பாதிப்பு என்கிற வகையில் தலைமுறை தலைமுறைகளாகத் தொடர்ந்து வரப்போகும் சாபம்.
ஒபாமா அறிவித்துள்ளதைப் போல் பயங்கரவதாதத்திற்கு எதிரான போர் தொடரத் தான் வேண்டும் ஆனால் யார் மிக மோசமான பயங்கரவாதி? இன்றைய உலகின் மிக மோசமான பயகரவாதம் அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக மக்களின் மேல் ஏவி விட்டுள்ள பயங்கரவாதம் தான் என்பதற்கு நம்மிடம் ஏராளமான சான்றுகளும் அதனால் உலக மக்கள் அனுபவித்து வரும் பாடுகளும் எதார்த்தத்தில் நம் கண் முன்னேயே உள்ளன. அமெரிக்க பயங்கரவாதத்தின் இலக்கு எங்கோ உள்ள தென்னமெரிக்க கண்டத்து மக்களும் ஆப்கானிய ஈராக்கிய மக்களும் மட்டும் தானென்றும் இங்கே நாமெல்லாம் பாதுகாப்பாகவும் சொகுசாகவும் வாழ்வதாக கருதிக் கொள்ளும் நடுத்தரவர்கத்தினரின் சமையலறை வரையில் அமெரிக்க ஆக்டோபஸின் கரங்கள் நீண்டிருப்பதை உணரவில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியம் என்று நாம் சொல்வது ஜார்ஜ் புஷ், ஒபாமா போன்ற ஒருசிலரோடு மட்டும் முடிந்து விடுவதல்ல – இவர்கள் உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலவர்களாக வீற்றிருக்கும் தேசங்கடந்த தொழிற்கழக முதலாளிகளின் உற்சவ மூர்த்திகள் மட்டும் தான். இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும், உள்நாட்டுத் தொழில்களையும் தாக்கியழித்துக் கபளீகரம் செய்யும் தனியார்மய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளாக அது தேச எல்லைகளையெல்லாம் கடந்து நீண்டு கிடக்கிறது. பி.டி கத்தரிக்காயாக உங்கள் சமையலறையில் ஊடுருவியிருக்கும் அதே நேரத்தில் நியாம்கிரி மலையிலும் இன்னும் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் தொழில் ‘வளர்ச்சியாக’ சிறகு விரித்துக் கிடக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரப் போகிறது – நீங்கள் யாருடைய பக்கம் நிற்கப் போகிறீர்கள்?-நன்றி வினவு