ரோஹித் வெமுலாக்கள் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள் ?
ரோஹித் வெமுலாக்கள் ஏன் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ? அவர்களின் பிரச்னை தான் என்ன ? தற்கொலைசெய்து கொள்வது சரிதானா? இல்லை தற்கொலை ஒரு வகை போராட்டத்திற்கான விதையா?..
ஏன் தற்கொலை செய்கிறார்கள்?
இந்திய வரலாற்றை கொஞ்சம் பின் நோக்கி சென்று பார்த்தால் கடந்த 2000 வருடங்களாக ஒருபிரிவினர் மட்டும் கல்வி என்பதை தனது பிறப்புரிமையாகவும் , மற்றவர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் மறுக்கும் உரிமையாகவும் காலஞ்சென்ற கொடிய தத்துவமான மனுதத்துவங்களை அடிகோள்காட்டி எல்லோருக்குமான அடிப்படை உரிமை மறுத்து வந்தது நாம் அறிந்ததே.
வேதங்கள் கற்கும் உரிமையை ஒருசமூகம் தனதாக்கி கொண்டு மற்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தை வேதத்தின் பெயரால் ஒதுக்கித்தள்ளியது .
ஆங்கிலேய ஆட்சி காலத்தில் கல்வி அனைவருக்குமாக கொண்டுவரப்பட்டது. ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா? துடித்தது . ஆங்கிலேய ஆட்சி இல்லை என்றால் அம்பேதகர் உருவாகியிருக்க முடியுமா என்பது சந்தேகத்திற்கிடமானது. சுதந்திர இந்தியாவில் , கல்வி அனைவருக்குமான அடிப்படை உரிமையான பின்பும், இட ஒதுக்கீடு சட்டத்தின் மூலம் கொடுக்க பட்ட பின்பும் ,ஆயிரக்கணக்கான பள்ளிகள் இருந்தும் இன்று வரை மற்றொரு அம்பேத்கர் பொறக்கவில்லை என்பதை நாம் எப்படி புரிந்துகொள்வது?
இன்னொரு அம்பேதகர் சாத்தியம் இல்லை இந்த ஒருநூற்றாண்டில் என்றால் நம்முடைய அடிப்படிஉரிமையும், கல்விகற்கும் உரிமையும், இடஒதுக்கீட்டின் நடைமுறையும் ,பள்ளி ,கல்லூரி சூழலும்,சமுதாயமும் எப்படி உள்ளது என்பதை நாம் உணர கடமைப்பட்டுள்ளோம் . இங்கே வெமுலாக்களால் புறச்சூழலை புறந்தள்ளி முன்னேற முடிவதில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. அரசும், சமூகமும், நிர்வாகமும் அவர்களை ஒவ்வொரு படிநிலையிலும் புறந்தள்ளி ,மனதளவில் அவர்களை ஒடுக்கி மூலையில் தள்ளிவிடுகிறது.
சோர்ந்து போன அவர்கள் தற்கொலையை தனது முடிவாக எடுக்கிறார்கள் .சிலர் அதை உலகுக்கு அறிவிக்கிறார்கள் ,பலர் அறிவிப்பது இல்லை.
என்னதான் பிரச்னை?
மனவலிமை இல்லை என்றால் எல்லாமே நமக்கு பிரச்சனைதான் . அம்பேத்கர் தன்னுடைய அலுவலகத்தில் சக உயர் சாதி வகுப்பினரால் தண்ணீர் குவளையை பயன்படுத்த தடுக்கப்பட்டபோது அவர் அதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுக்காமல் அடங்கிப்போய்விடவில்லை. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தீண்டாமையாலும்,ஜாதி கொடுமையினாலும் பாதிக்கப் பட்டார் ,அதை எதிர்கொண்டார்.
,காந்தியும் காங்கிரசும் கொடுத்த அத்தன்னை நெருக்கடியையும் எதிர்கொண்டார். வரலாற்றில் தனக்கான இடத்தை பதிவு செய்தார், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு முறையை சட்டத்தின் மூலம் பெற்று தந்தார். தனது இறுதி காலம் வரை போராடினார் துவண்டு விடவில்லை. இன்ற தாழ்த்தப்பட்ட சமுதாயம் அம்பேத்கரை படிக்கத்தவறியதே அவர்களது பிரச்னை. அம்பேத்கரை படிக்காமல் இந்திய புறச்சூலை எப்படி எதிர்கொள்வது?
தற்கொலை சரிதானா?
வெமுலாவின் தற்கொலைக்கு நாம் எப்படி காரணமோ இந்த சமுதாயத்தில் அதன் சரிவிகித பங்கு வெமுலாவின் முடிவிற்கும் உண்டு. அம்பேத்கரை படித்துவிட்டு எப்படி தற்கொலை தீர்வாக முடியும். தற்கொலை என்பது சுயநலத்தால் ,மனவலிமை குன்றி ,கற்பனைசெய்யப்பட்ட ஒரு தீர்வு. வெமுலாக்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் ,நாமும் அதை ஒரு செய்தியாய் படித்து மற்ற வேலையில் மூழ்கிவிட்டோம். இதனால் யாருக்கு என்ன பயன்?..வெமுலாவின் மரணம் நம்மை தூண்டியதா?,நாம் களத்திற்கு வந்து எவ்வகையான போராட்டத்தை முன்னெடுத்தோம்? இப்போது எல்லாம் சரியாகிவிட்டதா? இன்னொரு வெமுலா சாகாமல் இருப்பதை உறுதிசெய்துவிட்டோமா? ..இது ஏதும் இல்லை எனில் வெமுலாவின் தற்கொலை எப்படி சரியாகும்?
போராட்டத்திற்கான விதையா?
நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிடலாம். வெமுலாக்கள் இந்த நாட்டில் புதியதொன்றும் இல்லை . நாம் ஒருபோதும் விதையை முளைக்க அனுமதிப்பது இல்லை. நாம் மாறாமல் இங்கே மாற்றம் நிகழ வாய்ப்பில்லை.ஒத்த என்ன கருத்துள்ளவர்களை ஒன்று சேர்க்காமல் , புரட்சி செய்யாமல் இங்கே என்ன மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியும்?